கடந்த 2016-ல் ஜியோ 4ஜி சிம் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது நாள்தோறும் இலவச இணைய டேட்டா வழங்கப்பட்டது. இதனால் பலரும் ஜியோ சிம் கார்டை வாங்கி பயன்படுத்த தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் ஜியோ வழங்கும் இலவச டேட்டாவை மட்டும் பயன்படுத்துவிட்டு மற்றவர்களை அழைக்க தங்களது வாடிக்கையான பழைய எண்ணை பயன்படுத்தினர். தொடர்ந்து ஜியோ பல அதிரடி ஆஃபர்களை வழங்கியதால் பலரும் ஜியோ சிம் கார்டை உபயோகிக்க தொடங்கினர்.
இந்நிலையில், செல்ஃபோன் பயன்பாடு குறித்து யூபிஎஸ் அமைப்பு நாட்டின் 13 நகரங்களில் ஆய்வு நடத்தியது. அதில், கடந்த 2018 மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தில், 83 சதவிகித வாடிக்கையாளர்கள் அழைப்புகளுக்கு பிரதானமாக ஜியோ சிம் கார்டை பயன்படுத்தி வந்தனர். டிசம்பர் 2018 - ஜனவரி 2019 காலகட்டத்தில் இது 92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், 2018 மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தில், டேட்டா பயன்பாட்டிற்கு பிரதானமாக ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 83 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.