ஜார்க்கண்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதில், மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
குறிப்பாக, ஜார்க்கண்டின் கிரிடிஹின் பார்னி, அராரா பகுதிகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். போஜ்தாஹாவின் கர்ணபுர கிராமத்தில் லலிதா தேவி என்ற பெண்ணும், மெர்கோகவுண்டி கிராமத்தில் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். விவசாயி ஒருவர் காயமடைந்தார். இவர், பார்னியில் வசிக்கும் பஜ்நாத் வர்மா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
லோஹர்டாகாவில் மற்றொரு பெண்ணும் ஒரு ஆணும் இறந்தனர். மின்னல் காரணமாக இரட்டையர்கள் உட்பட ஐந்து குழந்தைகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோல், கோடாவின் குசும்கட்டியில் இரண்டு பெண்கள் தங்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
முன்னதாக ஜூன் 26 அன்று, பாலமு மாவட்டத்தில் மின்னல் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு, பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் 83 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்தனர்.
அதே நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழையால் வட இந்தியாவின் பல பகுதிகளில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் இறந்த 83 பேரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை, பிகாரின் பல்வேறு பகுதிகளில் பெய்துள்ளது.