வாரங்கால்: தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் ராயபர்த்தி மண்டல் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் நேற்று முன் தினம் இரவு கொள்ளையர்கள் ரூ.14.94 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிழமை வழக்கம்போல வங்கி கிளைக்கு வந்த ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வர்த்தண்ணப்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சீனிவாசராவ், சீனியர் இன்ஸ்பெக்டர்கள் ஷ்ரவன் குமார், ராஜூ உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர், ராஜா மகேந்திர நாயக் ஆகியோரும் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை நடந்தது எப்படி?: இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய போலீசார், "வாரங்கால் மாவட்டத்தில் ராயபர்த்தி மண்டல் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் திங்கள் கிழமை-செவ்வாய் கிழமைக்கு இடையே இரவில் கொள்ளை நடந்துள்ளது. இந்த வங்கிக் கிளையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதுகாவலர் யாரும் இல்லை. இதையெல்லாம் தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் வந்திருப்பதாக தெரிகிறது. வங்கிக்குள் நுழையும் முன்பு வங்கியின் அலாரத்துக்கான ஒயரை துண்டித்துள்ளனர். அதன் பிறகே வங்கியின் ஜன்னல் இரும்பு கிரிலை அகற்றி விட்டு அதன் வழியே உள்ளே நுழைந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் வாட்ஸ்ஆப் குழு அமைத்து மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்...சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!
வங்கிக்குள் நுழைந்த அவர்கள் சிசிடிவி கேமராக்களுக்கு செல்லும் வயர்களை துண்டித்து அதனை முடக்கியுள்ளனர். பின்னர் சிசிடிவி கேமராவை இணைக்கும் கணினியின் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள பதிவையும் அழித்திருக்கின்றனர். இதன் பின்னர் கேஸ் கட்டரைக் கொண்டு மூன்று லாக்கர்களை உடைத்து அதில் 497 பாக்கெட்களில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதன் பின்னர் கேஸ் கட்டரை வங்கிக்கு உள்ளேயே போட்டு விட்டு, வந்த வழியே தப்பிச் சென்றுள்ளனர்," என்று கூறினர்.
வாடிக்கையாளர்கள் அச்சம்: வங்கியில் கொள்ளை நடந்த சம்பவத்தை அறிந்து அந்த கிளையின் வாடிக்கையாளர்கள் நேற்று வங்கியின் முன்பு குழுமினர். தங்கள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இரண்டாவது சம்பவம்: இது இந்த வங்கியில் நடந்த இரண்டாவது சம்பவம் என்று போலீசார் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே வங்கிக் கிளையில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதையடுத்து ஒரு தனியார் செக்யூரிட்டி காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். எனினும் கடந்த ஒரு ஆண்டாக வங்கிக்கு காவலாளி யாரும் நியமிக்கப்படவில்லை. இதையெல்லாம் நோட்டம் விட்டே கொள்ளையர்கள் கொள்ளையை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்கள் விட்டு சென்ற கேஸ் கட்டர் மற்றும் கைரேகைகளைக் கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி குறித்து முழுமையாக கொள்ளையர்கள் அறிந்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்