ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஆட்சிக் காலம் டிசம்பர் 27ஆம் தேதியோடு முடிவடைவதால் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற தேசிய பிரச்னைகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்தது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமை வகிக்கும் கூட்டணியில் அக்கட்சி 43 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் 7 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிபெறும் நிலையில் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் போட்டி நிலவும் நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது. இந்நிலையில் பாஜகவின் ரகுபர் தாஸ் முதலமைச்சர் பதவியை தக்கவைப்பாரா என்பது இன்று மாலைக்குள் உறுதியாகிவிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குட்டிகளுடன் உலாவும் புலி, வைரலாகும் வீடியோ