தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஷீர்பாக் பகுதியில் வி.எஸ். தங்க நகைக்கடை செயல்பட்டுவருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் அஜய் குமார் தனது ஊழியர் பிரதீப்பிடம் ஜூபிலி ஹில்ஸில் கிருஷ்ணா முத்து கடையில் உள்ள நபரிடம் ஒன்றரை கிலோ நகைகள் இருக்கிற பையை ஒப்படைக்குமாறு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடையில் வேலை முடிந்ததும் பிரதீப் தனது இருசக்கர வாகனத்தில் பையை எடுத்துக்கொண்டு பலத்த மழையிலே புறப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, பஞ்சாரா ஹில்ஸ் சாலையில் உள்ள அரசுப்பள்ளி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், சிக்கிக்கொண்ட பிரதீப் செய்வதறியாமல் திகைத்த நிலையில், பைக்கில் முன்னால் வைத்திருந்த நகை பை தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளது. உடனடியாகச் சுதாரித்த அவர், பையை எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் நகை பை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. உடனடியாக, முதலாளிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கு விரைந்த அஜய் குமார் உள்பட 15 ஊழியர்களும் பையை தீவிரமாகத் தேடினர். இறுதியாக, கிடைத்த நகை பையை திறந்து பார்க்கையில், நகைகள் காணாமல் போகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக பிரதீப்பிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. பையில் இருந்த நகைகள் எப்படி மறைந்தது என்ற குழப்பத்திற்கு விடைதெரியாமல் உள்ளனர்.