ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மக்களின் நம்பிக்கை நாயகனாக ஜெகன் மோகன் ரெட்டி திகழ்கிறார். மேலும், ஜெகன் மோகன் ரெட்டி கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளிலேயே ஆந்திராவின் முதுபெரும் கட்சியான தெலுங்கு தேசக்கட்சியை தோற்கடித்திருப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.
மக்களின் நம்பிக்கையை இழந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் 23 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்துள்ளது. இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பிற்பகல் 12.33 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான அனைத்துப் பணிகளும் முடிவுற்று சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது. சுமார் முப்பதாயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விழாவில் பல்வேறு மாநில தலைவர்களும் பிற கட்சித் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் அவருடன் சாமி தரிசனம் செய்தனர்.
பதவி ஏற்பு விழாவில் பங்குபெறும் தலைவர்கள்
தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவை நேரில் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்று தன்னை ஆசிர்வதிக்குமாறு தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அவரது அழைப்பை ஏற்று சந்திர சேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண், சிரஞ்சீவி ஆகியோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இன்று பதவியேற்கும் ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கும் இந்த நாளை எதிர்பார்த்து ஒய்எஸ்ஆர் கட்சித் தொண்டர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் இந்திரா காந்தி மைதானம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மழை பெய்ததால் பதவியேற்பு விழா பாதிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியதோடு விழா மேடை பந்தல், விஐபி-க்களுக்கான குஷன் சேர்கள் சேதமடைந்துள்ளன. தற்போது அதனை சரிசெய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.