இஸ்லாமிய மதத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் விவாகரத்து முறைக்கு தடை விதிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிமுகப்படுத்தும்போதே இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி சங்கர் தெரிவித்தார். பின்னர் மசோத மீதான விவாவாதத்தின் போது ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.பி தினேஷ் சந்திர யாதவ், தங்கள் கட்சி முத்தலாக் விவகாரத்தில் பாஜகவுக்கு துணையாக இருக்காது என்றும், முத்தலாக் தடை குறித்து இஸ்லாமியர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அவர் தங்கள் கட்சி முதலில் இருந்தே இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம், முத்தலாக் விவகாரத்தில் பாஜகவிற்கு ஆதரவு தருவது குறித்து கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் ஏதேனும் முடிவு எடுக்கும் பட்சத்தில் கட்சியின் நிலைப்பாடு மாறலாம் என்று அவர் விளக்கமாகத் தெரிவித்தார்.
முத்தலாக் தடை மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள எம்.பியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது இருகட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.