இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஜனதா கர்ப்யூ எனப்படும் மக்கள் ஊரடங்கு என்னும் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, காவல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்பவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே மக்கள் ஊரடங்கு மேற்கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பை ஏற்று இந்திய ரயில்வே அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணிவரை ரயில்கள் இயக்கத்தை நிறுத்திவைத்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும் பொது போக்குவரத்தை நிறுத்திவைத்துள்ளன.
தமிழ்நாட்டில் மக்கள் ஊரடங்கு நேரத்தில் பொதுப்போக்குவரத்து நிறுத்திவைக்கப்படும் எனவும், இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று காலை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் அனைவரும் மக்கள் ஊரடங்கில் பங்கேற்று, கரோனா தடுப்பு முயற்சியில் பெரும் பங்கு வகிக்க வேண்டும். இன்றைய செயல் வருங்காலத்தில் முக்கியப் பலன்களைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஊரடங்கின் ஒரு பகுதியாக மாலை 5 மணி அளவில், மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு ஜன்னல், பால்கனி முன் வந்து நின்று மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட சேவைபுரியும் நபர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா பீதி: காத்து வாங்கும் மெரினா!