காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக திரிஷுல் மோர், பேட்டரி செஷ்மா, பாண்டியல் ஆகிய பகுதிகளின் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் இருபுறமும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்று கொண்டிருக்கின்றன.
இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஜய் ஆனந்த் கூறுகையில், "காஷ்மீரின் ஷெர்பிபி, மூன் பாஸி, ராம்சூ, பாண்டியல், டிக்டூல் உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்த சுமார் 150 வாகனங்கள் வியாழக்கிழமை (ஆக. 20) தாமதமாக அனுமதிக்கப்பட்டன.
ஆனால், அப்பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், நெடுஞ்சாலையில் மீண்டும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைய கூடுதலாக ஒரு நாள் ஆகும்.
மறுசீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலையின் இருபுறம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கியுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: கங்கையில் வெள்ளப்பெருக்கு - தலைநகருக்கு ஆபத்து?