கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு விழாவில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
விழாவில் பேசிய ஆளுநர், "நாட்டுக்காக தன்னலமின்றி பணியாற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள், காவல் துறையினரை பயங்கரவாதிகளும் கிளர்ச்சியாளர்களும் கொல்கின்றனர். மாநிலத்தைக் கொள்ளையடித்த ஊழல் ஆட்சியாளர்களையும் அலுவலர்களையும் அல்லவா நீங்கள் கொல்ல வேண்டும்" எனப் பேசினார்.
இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரான ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பொறுப்புமிக்க அரசுப் பதவியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர் இவ்வாறு பேசுவது மாண்புடையதல்ல' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அப்துல்லா.
இந்நிலையில், தான் அவ்வாறு பேசியது தவறு என்றும், கோபத்தின் வெளிப்பாடாக அவ்வாறு பேசிவிட்டதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளார் சத்யபால் மாலிக்.