குடியுரிமை திருத்தச் சட்ட மசோத நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இது சட்டமாக வடிவமானது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர், எதிர்க்கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள், சாலைகளில் சித்திரம் வரைந்து தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். அதில், தங்களின் பேச்சுரிமை, சுதந்திரம், உண்மை மீது 144 தடை உத்தரவை மத்திய அரசு திணிக்கக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனிடையே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களிலிருந்து தப்பி அகதிகளாக இந்தியா வரும் இந்து, ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்வதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.