மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை சட்டத்திருத்த மசோதவை மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த மசோதாவானது அரசியல் சட்டமைப்பிற்கு எதிராக உள்ளதென்றும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரானதென்றும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவேண்டும் என்று வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
குறிப்பாக, இந்த மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜாமிய மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத நபர்களால் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறுகையில், இந்த வன்முறைக்கும் மாணவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. உள்ளூர் வாசிகள் போராட்டத்தில் புகுந்து வன்முறையை ஏவியுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
போராட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று காலை பல்கலைக்கழக மானியக்குழு வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை விடுவதாக அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. தொடர்ச்சியாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ' மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை ' - டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் அதிரடி