டெல்லி: கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் நாளொன்றுக்கு ஒரு வீட்டுக்கு 55 லிட்டர் தண்ணீர் கிடைக்க உறுதிசெய்தது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் ஐந்து கோடி குடிதண்ணீர் இணைப்புகள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்குள் 19 கோடி குடிநீர் இணைப்புகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளன.
தென் மாநிலங்களை பொறுத்தமட்டில் முதல் இடத்தில் கேரளம் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வருகின்றன.
அலுவலர்களின் கூற்றுப்படி, பொதுமுடக்கம் (lockdown) அமலில் இருந்த மார்ச் மாதத்திலும் ஒரு லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஜல் ஜீவன் திட்டத்திற்காக 3.55 லட்சம் லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துமாறு முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்!