கேரளா மாநில உள்ளாட்சித் தேர்தல் பாலக்காடு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, பாலக்காடு நகராட்சி கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதப்பட்ட ஒரு பிரமாண்டமான பேனரை நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தொங்கவிட்டனர்.
இந்தச் செயல் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஈர்த்தது. இதை அடுத்து பாஜக தொண்டர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
வகுப்புவாத நல்லிணக்கத்தை அழிக்க முயற்சி நடந்துள்ளது என்று பாலக்காடு நகராட்சி செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை நகராட்சி முன் நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களின்போது, பாஜகவின் தொண்டர்கள் பேனர் வைத்தனர். அதில், ஜெய் ஸ்ரீ ராம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் புகப்படங்களை வைத்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்புத் துணை கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல்செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஜிதாஸ் தெரிவித்தார். பாலக்காடு நகராட்சியில் பாஜக 52 வார்டுகளில் 28 வென்றதன் மூலம் நகராட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.