ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது பிரதமரிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “ஆந்திராவில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே மூன்று தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கினோம்.
அதன்படி, விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரகாவும், அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மாநில அமைச்சகம் ஒப்புதல் வழங்கி, இது தொடர்பான மசோதா (Decentralisation Bill) சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது. புதிய தலைநகரங்களை உருவாக்க மத்திய அரசு ரூ. 1000 கோடி நிதி அளிக்க வேண்டும்
மேலும், இதன்பின்னணயில் மாநில சட்டமேலவையை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடித்திடவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதித்திடவும் திஷா சட்டத்தை (2019) கொண்டுவந்துள்ளோம். இதற்கு மத்திய அரசு ஒப்பந்தல் வழங்க வேண்டும்.
ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு தகுதி வழங்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளதாக 15ஆவது நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவாகரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திர அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 22 ஆயிரத்து 948.76 கோடியில் நிலுவையில் உள்ள ரூ. 18 ஆயிரத்து 969.26 கோடி பாக்கியை விரைந்து வழங்க வேண்டும்.
ரூ. 59 ஆயிரத்து 549 கோடி நிதியில் நிறைவேற்றப்படவுள்ள பொல்லாவரம் பாசனத் திட்டத்துக்கு நீர் வள தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் மத்திய அரசு அதற்கு நிர்வாக ஒப்பந்தம் வழங்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் மாநில அரசு செலவிட்டுள்ள மூன்று ஆயிரத்து 320 கோடி நிதியை மத்திய அரசு திரும்பியளிக்க வேண்டும். 2021ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம், எனவே அதனை விரைந்து அளிக்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரத்யேக வீடியோவுடன் பாஜகவுக்கு காங்கிரஸ் 'ஹக் டே வாழ்த்து ! #Hugday