ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்கும் வகையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தை, “வஞ்சகமானது, நம்பிக்கை மீறல்” என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரின் இடங்களை அனைவரும் வாங்கலாம் என்ற சட்டம் வஞ்சகமானது. இந்தப் புதிய சட்டத்தில், வேளாண் அல்லாத நிலங்களை வாங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் லடாக், ஜம்மு காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பாஜக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. திருத்தப்பட்ட நில விதிகள் அதன் வஞ்சகம் மற்றும் மலிவான அரசியலை காட்டுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் லடாக் தேர்தல் வரை பாஜக காத்திருந்தது. தற்போது லடாக்கில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜகவின் உறுதிமொழிகளை நம்பிய லடாக் மக்களுக்கு கிடைத்தது இதுதான்.
மேலும் இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீறுகின்றன. பன்முகத்தன்மை, ஜனநாயகம் மீது வெறுப்பை தருகின்றன. உள்ளூர், தனித்துவமான கலாசார அடையாளத்தை அழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் உள்ளன. இது மக்களின் விருப்பமும் அல்ல” என்றார்.