இது தொடர்பாக மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், "மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தொழிற்துறை பயிற்சி நிறுவனங்களின் (ITI) ஆண்டுத் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகின்றன.
இதனால் தமிழ்நாட்டிலுள்ள தேர்வர்களால், இத்தேர்வுகளில் பங்கேற்றும் அதிக மதிப்பெண்கள் பெறமுடிவதில்லை. மேலும், அதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெறுவதும் இயலாத ஒன்றாகவுள்ளது.
இந்தாண்டு முதல் ஆன்லைன் தேர்வுகளை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ-யில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்கின்றனர். கணினிகளைக் கையாளுவதும், ஆன்லைனில் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதுவதும் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
மாணவர்களுக்கு தனியார் மற்றும் அரசு துறையில் வேலைவாய்ப்பு பெறவோ அல்லது அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவோ தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொழிற்பயிற்சி படிப்புகளை வழங்குகின்றன.
தமிழ்நாடு, பிற மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பை உறுதிசெய்வதற்காக, இந்த மொழித் திணிப்பைக் கைவிட்டு அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, ஆன்லைன் தேர்வுகளைத் தவிர்க்கவும் வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ’நீதிபதிகளின் ஓய்விற்குப் பிறகு பதவிகளில் அமர்த்துவதைத் தடுக்கச் சட்டம்...!’