உலகையே மிரட்டிவரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது இந்தியாவில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இந்த நோயால் டெல்லி, ஹைதராபாத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை நேற்று காலை அறிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்ததாக ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பது இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறுகையில், "பாதிக்கப்பட்டவர் இத்தாலிய சுற்றுலாப் பயணி. கடந்த சனிக்கிழமை அவரைப் பரிசோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. ஆனால், அதன்பின்னர் அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் அவரை மீண்டும் பரிசோதித்தோம்.
இதில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய நச்சுயிரியல் கல்லூரிக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 வைரஸ் தென் கொரியா, ஈரான், இத்தாலி, அமெரிக்கா என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்த நோயால் உலகளவில் இதுவரை மூன்று ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவை சீனாவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவை மீண்டும் துரத்தும் கொரோனா!