ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருதுபெற்ற பத்திரிகையாளரும், கிராமப்புற இந்திய மக்கள் காப்பக இதழின் ஆசிரியருமான பி. சாய்நாத் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். கரோனா தொற்றால் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர், இந்த நெருக்கடியான சூழலை தவறாகக் கையாண்டதற்காக மத்திய, மாநில அரசுகளையும் (கேரளாவைத் தவிர்த்து) கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், "கேரளாவைத் தவிர்த்து மத்திய, மாநில அரசுகள் தொற்றுநோயைக் கையாண்ட விதத்தில் நிறைய தவறுகள் இருக்கின்றன. அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழுமையான பொது முடக்கத்தை மார்ச் 24ஆம் தேதி அறிவிப்பதற்கு முன்னர் நாட்டின் மக்களுக்குப் போதிய அவகாசத்தை வழங்காமல், அவர்களை மத்திய அரசு பெரிதும் பாதிப்படையச் செய்துவிட்டது.
இந்திய ராணுவத்தின் உச்சபட்ச கட்டளையையிடும் அலுவலர் கூட தனது ராணுவப் பிரிவுகளுக்கு பெரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் அவகாசம் கொடுப்பார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இவ்வாறாக நடந்துகொண்டது.
தொற்றை எவ்வாறு கையாளக்கூடாது என இந்திய அரசின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து ஒரு கையேட்டை எழுதி வெளியிடலாம் என நான் நினைக்கிறேன். அந்தளவிற்கு மோசமானதாக அரசின் நடவடிக்கைகள் இருந்தன. மத்திய அரசு அறிவித்த நிவாரணத் தொகுப்பு அப்பட்டமான ’மோசடி’.
இந்த தொகுப்புகளில் பெரும்பாலானவை புதிய பெயர்களில் வழங்கப்பட்ட பழைய திட்டங்களே தவிர வேறில்லை. உலகளவில் புகழ்பெற்ற இந்தியாவின் பல பொருளாதார வல்லுநர்கள், மத்திய அரசின் இந்த நிவாரணத் தொகுப்பைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காடு கூட, மத்திய அரசு அறிவித்ததில் இல்லை.
மத்திய அரசு வளர்ச்சி, முன்னேற்றம் எனச் சொல்லி போட்டியாளர்களாக மேற்காட்டிய பெரும்பாலான வளர்ந்த நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க மிக அதிகமான தொகையை ஒதுக்கியுள்ள நிலையில், இந்திய அரசு நாட்டு மக்களுக்கு என்ன செய்தது ?
கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேலைவாய்ப்பை வழங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தை 6% முதல் 10 % வரை விரிவாக்க வேண்டும். பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வியில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும்.
கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு உலகளாவிய சுகாதாரச் சேவையை வழங்குவதற்காக தனியார் மருத்துவ வசதிகளை தேசியமயமாக்க வேண்டும். ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நாடுகளைப் போல இந்தியாவில் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது ?
தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்ற குடிபெயர்ந்த மக்கள் நிச்சயமாக விரைவில் நகரங்களுக்கு வருவார்கள். அவர்களுக்கு நகரத்தை நோக்கி வருவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. நாட்டின் பொருளாதாரத்தையும், மக்கள் நல்வாழ்வையும் காக்க வேண்டுமெனில் மத்திய அரசு, விவசாயத் துறையை ஆதரிக்க வேண்டும். ஏராளமான இலவச உள்ளீடுகளை வழங்க வேண்டும்.
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படிருக்கும் பருத்தி, சர்க்கரை போன்றவற்றைத் தற்போது வாங்குவதற்கு எந்த நபரும் தயாராக இல்லை. அவை கொள்முதல் செய்வதற்கு ஆளில்லாமல் மலை போல குவிந்துகொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். மாநில அரசுகள் கூறிருவதைப் போல விவசாயிகளும் பணப்பயிர்களைப் பயிரிடுவதை விடுத்து உணவு, தானிய பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
இது விவசாயிகளின் சொந்த பாதுகாப்பிற்கானது. ஏனெனில் உணவு, தானியங்கள் மூலமாக நாட்டின் உணவு தேவைகள் தன்னிறைவு பெறுவதோடு, அவர்களுக்கு வருவாயையும் உறுதிசெய்யும். இறுதியில், எங்களுக்கு வளர்ச்சி தேவையில்லை. ஆனால், எங்களுக்கு நீதி தேவை. ஏழை, எளிய, நடுத்தர, பின்தங்கிய விளிம்புநிலை மக்களுக்கு நீதியைக் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பின் அடிப்படையில் இந்த அரசு இயங்க வேண்டும்.
இருப்பினும், நான் அவர்கள் முன் மண்டியிட்டு கெஞ்சுகிறேன். தயவுசெய்து ஏழை, எளிய பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முன்வாருங்கள். அந்த மக்களின் துயரங்களைப் போக்கவும், இதுபோன்ற இடரை மீண்டும் நிகழாத வகையிலும் உங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
விளிம்புநிலை மக்களின் துயரைத்தை துடைக்கும் செயல்களை மத்திய அரசு ஆற்றும் என்ற நம்பிக்கை என்னிடம் துளியும் இல்லை. அவர்கள் மீது நம்பிக்கையற்ற மனநிலையிலே நான் இருக்கிறேன். காரணம், இதுவரை எதுவும் செய்யாத அவர்கள், இனி அவற்றைச் செய்வார்கள் என்று நான் எவ்வாறு நினைக்க முடியும்" என்றார்.