இந்தியாவில் டிஜிட்டல் ஊடகங்களில் தாக்கமும் வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துவருகிறது. இருப்பினும், இதுபோன்ற டிஜிட்டல் ஊடகங்களுக்கு எவ்வித முறையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாததால் பல்வேறு தவறான தகவல்கள் இணையத்தில் மிக வேகமாக பரவுகின்றன.
இந்நிலையில் இது குறித்து உச்ச நீசிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், "ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை அரசு தொடங்கும் என்றால் அது முதலில் பிரதான ஊடகங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் ஊடகங்களில் இருந்துதான் தொடங்கும்.
ஏனெனில், பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாவது என்பது ஒரு முறை ஒளிபரப்பானால் முடிந்துவிடும். அதேபோல செய்தித்தாள்களிலும் ஒரு முறை செய்தி பிரசுரமானால் அது அத்துடன் முடிந்துவிடும். ஆனால் டிஜிட்டல் ஊடகத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற செயலிகளால் ஒரு செய்தி மிக வேகமாக பரவி எளிதில் வைரல் ஆகும் வாய்ப்புகள் அதிகம்
இதில் மின்னணு ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், வீடியோவை மையமாகக் கொண்டுள்ள டிஜிட்டல் செய்தி ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், ஓடிடிகள் என அனைத்தும் அடங்கும்.
இந்த விவகாரம் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. எனவே, இது தொடர்பாக எவ்வித வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் வழங்காது என்று நம்புகிறோம். மேலும், இவ்வழக்கு ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு எதிராக மட்டுமே தொடரப்பட்டுள்ளது" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் சுதர்சன் சேனல் என்ற தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உச்ச நீதிமன்றம் மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மின்னணு ஊடகங்களுக்கு வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது
இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வரும் வியாழக்கிழமை (செப். 24) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மோடி பிறந்தநாளை வேலை வாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கும் காங்கிரஸ்!