செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 2013ஆம் ஆண்டு மங்கல்யான் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன்மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
சுமார் ஆறு ஆயிரத்து 350 கிலோ எடை கொண்ட இந்த மங்கல்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு சுமார் பத்து மாதங்களுக்குப் பின் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இதன் செயல்பாடுகள் நடைபெறும் என்று கணக்கிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக செவ்வாயைச் சுற்றிவருகிறது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட மங்கல்யான், வெறும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது என்றார்.
இதன் பணி இனியும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தொடர்ந்து அரிய புகைப்படங்களை அனுப்பிக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். செவ்வாயைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் 2 டெராபைட் அளவுக்கு ஆயிரக்கணக்கான புகைப்படங்களை அனுப்பியுள்ளது என்றும் சிவன் கூறினார்.
தொடர்ந்து மங்கல்யான் 2 திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சிவன், அதற்கான திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்றும் கூறினார்.