ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை சிபிஐ ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது.
சிதம்பரத்தை 15 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை செய்து செப்டம்பர் 5ஆம் தேதி நீதிமன்ற ஆணைப்படி செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து, திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்தை இன்று மாலை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்நிலையில், சிதம்பரத்தின் சிறைவாசம் தொடருமா? அல்லது அவரின் பிணைகோரிக்கை ஏற்கப்படுமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ‘எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்’ - ப. சிதம்பரம் காட்டம்!
இதையும் படிங்க: ப. சிதம்பரம் பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!