பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக உள்ள மீரா குமாரின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்ப, அந்த முடக்கம் சரி செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்த விசாரணை நடைபெற்றுவருவதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "மீரா குமாரின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், அது சரி செய்யப்பட்டுவிட்டது.
சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார். பேஸ்புக் பக்கம் முடக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மீரா குமார், "இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்" என்றார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இம்மாதிரியான செயல்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்.
பிகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நடைபெறுவதால் இது தற்செயலான ஒன்று கிடையாது. பெரிய போராட்டத்திற்கு பிறகே எனது பக்கத்தின் முடக்கம் நீக்கப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கரோனா உறுதி!