குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததிலிருந்தே வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியது. இதையடுத்து மசோதா சட்டமானதைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்தது. மாணவர்கள் மட்டும் கலந்துகொண்ட போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியது. இதை முடக்கும் விதமாக இணைய சேவைகள் அசாமில் துண்டிக்கப்பட்டது.
இதை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இணைய சேவைகளை தொடங்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, 9 நாட்களுக்குப் பிறகு இணைய சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது. பொதுநல வழக்கை தொடர்ந்து இணைய சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு காரணமான வழக்கறிஞர்களுக்கு மக்கள் ட்விட்டரில் நன்று தெரிவித்துவருகின்றனர்.
இருந்தபோதிலும், அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளைப் போட வேண்டாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை பின்தொடர்கிறாதா ஜார்கண்ட்? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?