கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருநாட்டு ஒப்பந்தகள் அடிப்படையில் (Bilateral Air Bubbles) சர்வதேச விமானப் போக்குவரத்து மிகக் குறைந்த அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச விமானப் பயணிகள், விமான நிலைத்திலேயே கரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் வசதி டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கரோனா மருத்துவப் பரிசோதனைகளுக்காக முதலில் பயணிகள் ஆன்லைனில் புக் செய்துகொள்ள வேண்டும்.
அதன்பின் மருத்துவக் குழு, இதற்காகவே அமைக்கப்பட்டுள்ள காத்திருக்கும் இடங்களுக்கு (waiting lounge) வந்து மாதிரிகளை சேகரித்துக் கொள்வார்கள். விமான நிலையங்களில் எடுக்கப்படும் RT-PCR சோதனையின் முடிவுகள் நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் தெரியவரும்.
விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனை முடிவுகளில் கரோனா இல்லை என்பது தெரிய வந்தால், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
அரசு வழிகாட்டுதல்களின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தற்போது ஏழு நாள்கள் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், அதைத் தொடர்ந்து ஏழு நாள்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா மருத்துவப் பரிசோதனைகளுக்கு 2,400 ரூபாய், காத்திருக்கும் இடங்களுக்கு 2,600 ரூபாய் என மொத்தம் 5,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!