டெல்லி : கம்போடியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 டன் பேரிடர் நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல் கில்டான் அந்நாட்டின் சிஹானுக்வில் துறைமுகத்தை சென்றடைந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கம்போடியாவில், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் எட்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கம்போடியாவிற்கு உதவும் வகையில், 15 டன் நிவாரணப் பொருள்கள் அந்நாட்டின் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் (என்.டி.எம்.சி) ஒப்படைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐஎன்எஸ் கில்டானின் தற்போதைய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்தும்.
மிஷன் சாகர்-3இன் ஒரு பகுதியாக ஐ.என்.எஸ். கில்டானின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நட்புரீதியான நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளும், பேரழிவு நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். கில்தான் 2020 டிசம்பர் 29 அன்று கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தை சென்றடைந்தது.
இதையும் படிங்க: அரச குடும்பத்திலிருந்து விலகி கிறிஸ்துமஸ் கொண்டாடிய இளவரசர் ஹாரி தம்பதியினர்!