பல்கர் படுகொலை சம்பவத்திற்கு வகுப்புவாத சாயம் பூசுவது மனிதநேயமற்ற செயல் என சிவசேனா தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப் பூர்வ செய்தித்தாளான சாம்னாவில், வெளி வந்த தலையங்கத்தில் சூரத்துக்கு துக்க நிகழ்வுக்கு கலந்துகொள்ளச் சென்ற இரண்டு சாதுக்கள் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும்; அது தவறான புரிதலால் ஏற்பட்ட நிகழ்வு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது திருடர்களும், குழந்தைக் கடத்தல்காரர்களும் பல்கர் மாவட்டத்தில் உலாவுவதாக வதந்தி பரவியதையடுத்து, அந்த சாதுக்கள் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின் மூலம் சிலர் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்துவதற்கான விதைகள் தூவப்பட்டன.
இருந்தபோதிலும் மகாராஷ்டிரா அமைதியாக இருந்து வருகிறது என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கருத்துக்கு ஆதரவாக வெளிவந்துள்ள தலையங்கத்தில், பாலாசாகேப் தாக்ரே பிறந்த மண்ணில் இந்து சாதுக்கள் கொல்லப்படுவதா? என்று கேள்வி எழுப்பும் சிலருக்கு தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றபோது, இது தாக்ரேவின் மண் என்பது தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்துவாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவிக்கும் தலையங்கத்தில், கொலை நடந்த பகுதி கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது என்றும்; கிராம பஞ்சாயத்துகளிலும் பாஜகவின் கையே மேலோங்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சாதுக்கள் கொலைச் செய்யப்பட்டதற்காக எதிர்க்கட்சிகள் கோபப்படவில்லை. இதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்திவிடலாம் என முயற்சித்து நிறைவேறாமல் போனதால் கோபம் கொள்கின்றனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவின் மதிப்பை பாதித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இது திட்டமிட்டே மகாராஷ்டிராவின் மதிப்பை குலைப்பதற்காக நடந்ததா? என்று அந்த தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பல்கர் வன்முறைச் சம்பவத்தை அரசியலாக்கும் பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு