கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி நேற்று (மே 18) இரவு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ''டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மார்க்கெட்டுகளில் உள்ள கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் (odd - even days) செயல்படலாம். போக்குவரத்திற்காக பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில், 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மெட்ரோ சேவைகள், பள்ளிகள், தியேட்டர்கள், சலூன் கடைகள், கல்லூரிகள் ஆகியவை செயல்படுவதற்கு அனுமதியில்லை.
உணவகங்களில் பார்சல் வசதி, ஹோம் டெலிவரிக்கு அனுமதியளிக்கப்படும். மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்கலாம்'' என்றார்.
இதையடுத்து, நேற்று இரவு டெல்லி தலைமைச் செயலாளார் விஜய் தேவ், ''தொழில்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு விதித்த பாதுகாப்பைக் கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்யவேண்டும்.
தொழில் நிறுவனங்களின் சார்பாக பதிவு செய்யப்பட்ட பெயர்களில் A முதல் L எழுத்துக்களில் தொடங்கும் நிறுவனங்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், M முதல் Z எழுத்துக்களில் தொடங்கும் நிறுவனங்கள் காலை 8.30 மணி முதல் 6.30 மணி வரை செயல்படலாம். அரசு நிர்ணயித்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: மதுக்கடைகள் திறப்பு ரத்து- முதலமைச்சர் நாராயணசாமி