சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இதன் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துவருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 537 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளது. இதில் 71 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் குணமடைந்ததன் மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த 12 மணிநேரத்தில் நாடு முழுவதும் இந்த நோய் தொற்றால் 30 பேர் உயிரிழந்ததன் மூலம், அதன் எண்ணிக்கை 169-ல் இருந்து 199ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் அதிக உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 97 பேர் இந்த வைரஸால் உயிரிழந்த நிலையில், 1,364 பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் ஏற்பட்ட மாநிலங்களின் விவரம்: குஜராத்தில் (17) , மத்தியப் பிரதேசம் (16), டெல்லி (12), தமிழ்நாடு (8), பஞ்சாப் (8), தெலங்கானா (7), மேற்கு வங்கம் (5), கர்நாடகா (5), ஆந்திரப் பிரதேசம் (4), ஜம்மு காஷ்மீர் (4), உத்தரப் பிரதேசம் (4), ஹரியானா (3), ராஜஸ்தான் (3), கேரளா (2), ஹிமாச்சல பிரதேசம் (1), பீகார் (1), ஒடிசா (1), ஜார்க்கண்ட் (1).
இதையும் படிங்க: கரோனாவை தடுத்து நிறுத்துவோம்!