நாட்டின் உற்பத்தித் துறை குறித்து ஐ.எச்.எஸ். மார்கிட் இந்தியா மாதாந்திர கணக்கெடுப்பு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், ஜூலை மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 46ஆக உள்ளது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 47.2ஆக இருந்துள்ளது. ஒரே மாதத்தில் ஒரு விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கால் மக்களுக்குத் தேவை நிலை இல்லாதது உருவானதும், நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையும், பயனர்களின் எண்ணிக்கையும் குறைந்ததும்தான் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ஐஎச்எஸ் மார்க்கிட்டின் பொருளாதார நிபுணர் எலியட் கெர் கூறுகையில், "இந்திய உற்பத்தியாளர்களின் சமீபத்திய பிஎம்ஐ தரவு, கோவிட்-19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார நிலைமையை வெளிக்காட்டுகிறது. கணக்கெடுப்பு முடிவுகள் உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்களின் வீழ்ச்சியைக் சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் லாக்டவுனால் ஊர்களில் சிக்கியுள்ளனர். தொற்று விகிதங்கள் குறைக்கப்படும் வரையும், கட்டுப்பாடுகளை அகற்றும் வரையும் நாங்கள் நிறுவனங்களின் செயல்பாட்டை குறித்து ஆராய மாட்டோம். ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படுவதால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுதான் உள்ளன. ஏற்றுமதி ஆர்டர்களும் சரிவைக் கண்டன.
தொற்றுநோய் தாக்கம் அதிகளவில் உள்ளதால் சர்வதேச வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை வழங்க தயங்குகின்றனர். பல மூலப்பொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், பெரும்பாலன பொருள்களின் உற்பத்தியும் தேவையும் குறைந்து வருகிறது. கரோனா நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தையும், உற்பத்தியையும் மேம்படுத்துவோம்" எனத் தெரிவித்தார்.