மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில். இவர் தனது ஆறு வயதில் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். ஆனால் தன்னம்பிக்கை இழக்காத இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்று, சர்வதேச உறவுகள் தொடர்பான தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பார்வையிழப்பை ஒரு பொருட்டாகவே கருதாமல் மென்பொருளின் உதவியுடன் 2017ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வெழுதி தேசிய அளவிலான தரப் பட்டியலில் 124ஆவது இடத்தைப் பிடித்தார். பின்னர் பிரஞ்சால் பட்டிலுக்கு, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணி வழங்கப்பட்டது. எர்ணாகுளத்தில் அவர் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத் துணை ஆட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்டத் துணை ஆட்சியராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர், ஆட்சியர் அலுவலர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'செத்த எலி' விமர்சனம்: கட்டாருக்கு காங்கிரஸ் கண்டனம்