போர் விமானங்களில் ஆண்களைப் போல் பெண்களும் விமானிகளாக பணிபுரிய 2018ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதனைத்தொடர்ந்து பெண் விமானிகளுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண்களின் தலைமையிலான மகளிர் குழு விமானப்படையின் எம்ஐ-17 வி5 ரக போர் ஹெலிகாப்டரை இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை பெண் அலுவலர் அமன் நிதி, சண்டிகரைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஹினா ஜெய்ஸ்வால், பெண் விமானி பரூல் பரத்வாஜ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17 வி5 ரக போர் ஹெலிகாப்டரை பரூல் பரத்வாஜ் இயக்க துணை விமானியாக அமன் நிதியும், விமான பொறியாளராக ஹினா ஜெய்ஸ்வாலும் பணியாற்றிஇயக்கினர்.
நாட்டின் தென்மேற்கு விமானப்படை தளத்தில் இருந்து பறக்கும் போர்ச்சூழல் ஒத்திகையில் ஈடுபட்டனர். எம்ஐ-17 வி5 ரக போர் ஹெலிகாப்டரை பரிசோதித்து பறக்க தகுதி பெற்றது என்று சான்றிதழ் வழங்கியது மற்றொரு பெண் அலுவலர் ரிச்சா ஆவார்.
ஆண்களுக்கு இணையாக சாதித்துவரும் பெண்கள் நால்வரையும் இந்திய விமானப்படை பாராட்டியது.