மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் கடந்த செவ்வாய் அன்று (மே 18) 134 பேர் உயிரிழந்தனர். இதனால், கரோனாவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,163ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், 2,350 பேர் குணமடைந்ததன் மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ஆக அதிகரித்துள்ளது. இதனால், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 38.73 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், ஒரு லட்சம் மக்கள்தொகையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் சராசரியாக 4.1ஆக உள்ள நிலையில், இந்தியாவில் அந்த சராசரி 0.2ஆக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான புதிய தகவல்கள் இதோ:
- கேரளாவில் நேற்று கரோனா வைரசால் 12 பேர் பாதிக்கப்பட்டதன் மூலம், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 642ஆக அதிகரித்துள்ளது.
- வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் சேர திட்டமிட்டிருந்த பல்வேறு இந்திய மாணவர்கள் தற்போது கரோனா வைரஸ் காரணமாக தங்களது படிப்பை நாட்டிலேயே தொடர ஆர்வமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைச் சமர்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பைத் தருமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.) கோரிக்கை விடுத்துள்ளார்.
- மாணவர்கள் JEE , நீட் போன்ற தேர்வுகளுக்கான முன்மாதிரி தேர்வுகள் எழுத உதவியாக இருக்கும் 'நேஷனல் டெஸ்ட் அபியாஸ்' என்ற செயலியை அமைச்சர் பொக்ரியால் அறிமுகப்படுத்தினார்.
- கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்ட்டில் புதிதாக எட்டு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், உத்தரகாண்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது.
- ராஜஸ்தானில் நேற்று புதிதாக 128 பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,757ஆக அதிகரித்துள்ளது.
- கர்நாடகாவில் நேற்று 149 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து, அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,395ஆக அதிகரித்துள்ளது.
- நேற்று 4 மணியளவில் ரயில்வே துறை வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 1,595 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வெவ்வெறு மாநிலங்களில் சிக்கித்தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 21 லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
- மகாராஷ்டிராவில் நேற்று 55 காவலர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கரோனாவால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,328ஆக அதிகரித்துள்ளது.
- நேற்று மத்தியக் காவல் படை வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் மூன்று பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- டெல்லியிலிருந்து மணிப்பூருக்குத் திரும்பிய 64 வயதான மூதாட்டிக்கும், 23 வயதான அவரது மகளுக்கும் கரோனா இருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்தது. இதன்மூலம், மணிப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை இரண்டு பேர் மட்டுமே இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மீதமுள்ள ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில் சேவை தொடக்கம்: ஜூன் 1ஆம் தேதி முதல் நாள்தோறும் 200 ரயில்கள் இயங்கும்