ஒரு காலத்தில் நாம் எல்லோருமே மாற்றம் அடைவோம். நவீன தகவல் தொழில்நுட்ப புதுப்பிப்புகளை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் போட்டிகள் நிறைந்த உலகில் நாம் பின் தங்கி விடுவோம். இங்கிலாந்து மற்றும் சீனா, ஜப்பான் உள்பட உலகம் முழுவதும் 20 நாடுகளில் இப்போது புல்லட் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதும் இந்த அதிவேக ரயில் ஓட்டத்தின் சத்தம் இன்னும் கேட்கவில்லை. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கூடுதலாக இன்னும் ஏழு புதிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இதில் நாட்டின் நிதி தலைநகரான மும்பையை ஐதராபாத் நகருடன் இணைக்கும் ரயில்பாதையும் ஒன்றாகும். புதிய திட்டங்களுக்கான முயற்சிகளை சிந்திக்கும்போது அது மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது, ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட லட்சிய திட்டப் பணியில் பின்னர் எந்தவித முன்னேற்றமும் இல்லாது இருப்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
ஜப்பான்-புல்லட் ரயிலுக்கான சிறந்த உதாரணம்
உலகின் முதல் ரயிலை தொடங்கியதன் மூலம் ஜப்பான் முதல் நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 1964-ல் தொடங்கப்பட்ட அதி விரைவு ரயில் சேவைகள் டோக்கியோ மற்றும் ஒசாகா மாநகரங்களை இணைக்கின்றன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் வலுப்பெறுவதற்கு புல்லட் ரயில் திட்டம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.
எனினும், இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த தருணத்தில் ஜப்பான் பொருளாதாரம் சரிந்தது. அப்போதில் இருந்து அரசும் மக்களும் இணைந்து வியர்வை சிந்த உழைத்து நாட்டின் வளர்ச்சியை சரியான பாதையை நோக்கி மீண்டும் கொண்டு வந்துள்ளனர். நாட்டில் பங்கேற்பு வளர்ச்சியை அடையும் நோக்கத்துடன் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் ஈடுபட்டது.
இது அந்த நாட்டின் வணிகத்துறையில் தேசத்தின் பொருளாதார நிலையில் புரட்சியை ஏற்படுத்தியது. பயண நேரம் குறைந்ததால், உற்பத்தி நேரம் அதிகரித்தது. இதன் விளைவாக தொழிலகங்கள் மனித வளங்களை திறன்மிக்கதாக உருவாக்க முடிந்தது. ஏற்கனவே கூறியபடி சுற்றுலாத்துறையும் மலர்ச்சியடையத் தொடங்கியது. ஜப்பானின் பொருளாதாரம் வெற்றியடையத் தொடங்கியது.
ரயில் விபத்துகள் காரணமாக இறப்பே இல்லை என்ற சூழல் ஏற்பட்டதுடன், சராசரியாக 20 வினாடிகள் தாமதமாக வருவது வலுவான தன்மைக்கு சான்றாக விளங்கியது. ஜப்பான் போன்ற நாட்டில், அதி வேக புல்லட் ரயில் முறை மூலம் ஆற்றல் கொண்டு வரப்பட்டது.
ஜப்பான் உதவியுடன் அகமதாபாத் முதல் மும்பை வரை 508 கி.மீ தூரத்துக்கு நீண்ட புல்லட் ரயில் பாதையை கட்டமைக்கும் முயற்சியை மோடி அரசு எடுத்தது. 2017-ம் ஆண்டு, அப்போதைய ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் தோராய மதிப்பீடாக 1.08 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டது.
இதில் 81 சதவிகித நிதி ஜப்பானில் இருந்து கடனாகப் பெற திட்டமிடப்பட்டது. 2023-ம் ஆண்டு டிசம்பருக்குள்ளாவது புல்லட் ரயிலின் முதல் பயணத்தை தொடங்கி விடலாம் என்று இலக்கு உருவாகப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தியா 75ம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது அதே ஆண்டு ஆகஸ்ட்டில் சில புல்லட் ரயில் சேவைகள் துவக்கப்படலாம் என்று மத்திய அரசு நம்பியது. இதன் காரணமாக முன்னதாகவே இந்த திட்டத்தை தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும்
ஒரு மணி நேரத்துக்கு 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில் பயணம் இருக்கும். அகமதாபாத்-மும்பை இடையே பயண தூரம் 3 மணி நேரமாக குறையும் என்று தேசிய அதிக வேக ரயில் கழகம் கூறுகிறது. எனினும், இந்த பாதைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஏற்கனவே மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில். இந்த திட்டத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை.
இந்த ரயில் பாதையை கட்டமைக்க 1,380 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும். இதில் குஜராத் மாநிலத்தில் இருந்து 940 ஹெக்டேர் நிலங்கள் தேவை. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 431 ஹெக்டேர் நிலங்கள் தேவை. மீதம் உள்ள நிலங்கள் தாத்ராநகர் ஹவேலியில் இருந்து தேவை. இதில் இதுவரை மொத்த நிலத்தில் 63 சதவிகிதம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கும்போது, மத்திய அரசு மற்றும் தேசிய அதி விரைவு ரயில் கழகம் ஆகியவை திட்டத்தை முடிப்பதற்கான இலக்கை 2028-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்க திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதற்கு இணையாக, திட்டத்தின் செலவும் அதிகரிக்கும். அண்மையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, வெளிப்படையாக, இந்த திட்டம் தமது முன்னுரிமை பட்டியலில் இல்லை என்று கூறி உள்ளார். பிரதமர் மோடி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார் என்பதால், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டத்தை தாக்ரே புறக்கணிக்கிறார்.
இதுபோன்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் குறித்து ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசியது குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. இந்த நிலையில் தேசிய, மாநில நலனைக் கருத்தில் கொண்டு தங்களது விவசாய நிலத்தை இந்த திட்டத்துக்காகக் கொடுக்க எந்த விவசாயி முன் வருவார் என்று எதிர்பார்க்க முடியும்?
விவசாயிகள் தங்கள் வளமான நிலத்தைப் பிரிந்து விட்டால், சாலையோரத்தில்தான் வாழ வேண்டி இருக்கும். திட்டத்துக்காக ஒருமுறை அவர்கள் இழந்து விட்டால், அவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தால், வழியிலேயே அவர்கள் விழுந்து விடுவர். எனவே, மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களிடம் நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும்.
அவர்களின் எதிர்காலத்துக்காவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற உறுதியையும் அவர்களுக்குத் தர வேண்டும். புல்லட் ரயில் திட்டத்தின் தொடக்கத்தால் நாட்டுக்கு நலன்கள் சேருகின்றன என்று அவர்களிடம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு உரிய மறு வாழ்வு திட்டங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
சந்தை விலையை விடவும், சில மடங்கு அதிகமாக அவர்களின் நிலத்துக்கு விலை தர வேண்டும். அவர்களிடம் இருந்து பெறப்படும் நிலத்துக்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் நிலம் ஒதுக்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு புதியவீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேவையெனில் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் அளிக்க அரசு முன் வரவேண்டும். இவையெல்லாம் நடந்தால் மட்டுமே, புல்லட் ரயில் எனும் கனவை நனவாக்கும் நடவடிக்கையை நோக்கி நாடு உண்மையான அடி எடுத்து வைத்ததாக அர்த்தமாகும்.