கடந்த 2018ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பானது கேமரா மூலம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பானது கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக, தற்போது கின்னஸ் சாதனை மையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "கடந்த 2018 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் நான்காவது சுழற்சியானது, உலகத்திலேயே மிகப்பெரிய அளவில் கேமரா உதவியுடன் நடத்தப்பட்ட வனவிலங்கு கணக்கெடுப்பாக, தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு சிறந்த தருணம் மட்டுமல்ல ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒளி மயமான உதாரணமுமாகும். இந்தியாவில் உள்ள புலிகளின் கணக்கெடுப்பைக் கவனத்தில் கொண்டால் உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில், சுமார் 75 விழுக்காடு புலிகள் இந்தியாவில் தான் உள்ளன என்பது தெரியவரும்.
பிரதமரின் ஆலோசனையின் பெயரில் தொடங்கப்பட்ட "சங்கல்ப் சே சித்தி" திட்டத்தின் மூலம் இலக்குகாக வைக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிய இந்திய அரசிற்கு இது மேலுமொரு பெருமையைச் சேர்த்திருக்கிறது" என்றார்.
கின்னஸ் உலக சாதனையின் வலைத்தளம் கூறியது, " இந்தியாவில் 2018-2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் நான்காவது மறு செய்கை - வள மற்றும் தரவு இரண்டையும் பொறுத்தவரை இன்றுவரை உலகிலேயே மிகவும் விரிவானதாக கருதப்படுகிறது.
கேமரா பொறிமுறை உதவியுடன் ( மோஷன் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் வெளிப்புற புகைப்பட சாதனங்கள் ஒரு விலங்கு கடந்து செல்லும்போது பதிவு செய்யத் தொடங்கும் ) 141 வெவ்வேறு தளங்களில் 26,838 இடங்களில் வைக்கப்பட்டு 1 லட்சத்து 21 ஆயிரத்து 337 சதுர கிலோமீட்டர் (46 ஆயிரத்து 848 சதுர மைல்) பரப்பளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 3 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரத்து 623 வனவிலங்குகளின் படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (அவற்றில் 76 ஆயிரத்து 651 புலிகள் மற்றும் 51 ஆயிரத்து 777 சிறுத்தைகள்; மீதமுள்ளவை பிற பூர்வீக விலங்கினங்கள்). இந்த நிழற்படங்களிலிருந்து, 2 ஆயிரத்து 461 தனிப்பட்ட புலி குட்டிகள் அடையாளம் காணப்பட்டன.
இந்தப் நிழற்படங்களில் இருந்து புலிகளின் தோலில் காணப்படும் உள்ள வரிக்கோட்டு அமைப்பு அங்கீகரிப்பு மென்பொருள் மூலம் ஒவ்வொரு புலியும் அடையாளம் காணப்பட்டன" என அதில் கூறியுள்ளது.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் அனைத்திந்திய புலிகள் கணக்கீட்டை இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.