கரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியாவின் உற்பத்தி துறை, சேவைத்துறை ஆகியவை பெரும் சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, முதன்முறையாக கடந்த அக்டோபர் மாதம் இந்திய சேவைத்துறை செயல்பாடுகள் வளர்ச்சியை கண்டுள்ளதாக, ஐ.ஹெச்.எக்ஸ் மார்க்கிட் இந்தியா சேவையின் மாதாந்திர கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஐ.ஹெச்.எக்ஸ் மாக்ர்கிட்டின் கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டின்படி (பி.எம்.ஐ) கடந்த செப்டம்பர் மாதம் 49.8 விழுக்காடாக இருந்த இந்திய சேவைத்துறை செயல்பாடுகள், அக்டேபார் மாதம் 54.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐ.ஹெச்.எக்ஸ் மார்க்கிட்டின் பொருளாதார இணை இயக்குநர் பொலியானா டி-லிமா கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இந்திய உற்பத்தி துறையும், சேவைத்துறையும் மீண்டு வருவதற்கான செயல்பாடுகள் உத்வேகம் அளிப்பதாக உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உற்பத்தி துறை மீட்சி அடைந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது சேவைத்துறையும் மீட்சியை சந்தித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் நாட்டில் புதிய தொழில்கள் உருவாகியிருப்பது புலப்படுகிறது. ஆனால் புதிய வேலைவாய்புகள் பெருமளவில் உருவாகவில்லை. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சி அடைந்தே காணப்படுகிறது.
அதேபோல், கரோனா பரவல் காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் பலர், அச்சம் காரணமாக மீண்டும் தங்களுடைய பணிகளுக்கு திரும்பவில்லை. கரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தொழில்துறை செயல்பாடுகளில் நேர்மறையான மாற்றம் இருக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: