இயந்திரக் கற்றல் திறன்கொண்டு மூளையின் செயல்பாடுகளை 98 விழுக்காடு அளவுக்கு துல்லியமாகக் கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒவ்வொரு கட்டிக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. எம்.ஆர்.ஐ. போன்ற சோதனைக் கருவிகள் மூலம் தகவல்களைத் திரட்ட மருத்துவர்கள் பெரும் பாடுபட வேண்டும்.
காரணம் ஒவ்வொன்றின் தன்மையிலும் பல வேறுபாடுகள் இருக்கும். இதனை எளிதில் கணிக்க தற்போது செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயின் தன்மை விரைந்து அறியப்பட்டு, சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கிளியோமாஸ் மூளைக்கட்டி நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவிசெய்ய இந்திய-ஜப்பான் விஞ்ஞானிகள் இணைந்து மிகவும் துல்லியமான செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் ஒரு மருத்துவ இயந்திரக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
கிளியோமாஸ் என்பது கிளைல் செல்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான வகை மூளைக்கட்டியாகும். இது நியூரான்களுக்கான ஆதரவையும் காப்புத்தன்மையையும் கொடுத்து கட்டி வளர உதவுகிறது. கட்டியின் ஆக்கிரமிப்புக்கு ஏற்ப சரியான முறையில் நோயைக் கண்டறிவது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.