புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நாடு முழுவதும் இந்திய ரயில்வே சார்பில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏற்கனவே நோய் பாதிப்பு இருப்பவர்கள், அத்தியாவசியப் பயணங்கள் தவிர, ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு ரயில்வேத் துறை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய், புற்றுநோய் ஆகிய நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்புக் குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பயணத்தைத் தவிருங்கள்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரயில் நிலையம் ஒன்றில் உயிரிழந்தத் தாயை, அவரது குழந்தை எழுப்ப முயன்ற காணொலி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து அப்பெண் பசியால் உயிரிழக்கவில்லை, மாரடைப்பால்தான் உயிரிழந்தார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்தவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் ஆணையை சுட்டிக்காட்டி, நோய் பாதிப்பு உள்ளவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு ரயில்வேத் துறை தற்போது வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கால நீட்டிப்பு