இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதிவரை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் எதிரொலியாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்துவந்த ஏராளமானோர் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர். கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நடந்தவாறே பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவுக் குரல்களும் பெருகிவந்தன. இதனையடுத்து, குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஆன்மிக யாத்ரீகர்கள், மாணவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு திருப்பியனுப்ப மத்திய உள் துறை அனுமதி அளித்தது.
இதற்காக நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியது. இருப்பினும், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் பயணப்படுவதால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ரயில்கள் டெல்லி ரயில்வே நிலையத்திலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத், ஜம்மு ஆகியவற்றை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும்.
சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும். பெரும்பாலான ரயில்கள் தினசரி அடிப்படையில் இயக்கப்படும் அதே வேளையில், முன்பதிவு பட்டியலில் உள்ள மற்றவர்கள் வாராந்திர, இரு வார, மூன்று வார அடிப்படையில் இயக்கப்படும் ரயல்களில் பயணப்படுவர்.
அனைத்துப் பயணிகளும் “ஆரோக்யா சேது” செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. பயணக் கட்டணம், உணவு முன்பதிவு வசூலிப்பதைத் தவிர்த்து எந்தவொரு கட்டணமும் சேர்க்கப்படாது.
ரயிலுக்குள் துணி, போர்வைகள், திரைச்சீலைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்பதால் பயணிகள் தங்கள் சொந்த துணியை பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இது தவிர, அனைத்துப் பயணிகளும் கட்டாயமாகப் பரிசோதனை செய்யப்படுவார்கள். மேலும், அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
![Indian Railways all set for partial resumption of passenger services from today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7161796_tt.jpg)
கோவிட்-19 பராமரிப்பு மையங்களுக்கு 20,000 பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிய ரயில்களின் சிறப்பு சேவைகளைத் தொடங்கும் திட்டமும் இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பயனாளர் தரவைச் சேகரிப்பதில் ஆரோக்கிய சேது ஓகே தான்: அறிக்கை சொல்லுது!