அரசியலில் குற்றவாளிகள் ஈடுபடுவது என்பது ஒரு ஜனநாயகத்திற்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவு என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) 2014 அறிக்கையின்படி, நாடு முழுவதும் 1581 அரசியல்வாதிகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும் உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து சமீபத்திய நிலைமை பற்றிய விவரங்களைப் பெற உத்தரவிட்டது.
தற்போதைய மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தவும், தண்டனை பெற்ற உறுப்பினர்களை ஆயுட்காலம் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தின் நடுநிலை ஆலோசகர் ஹன்சாரியா தொடுத்த பொது நல வழக்குகளின் மூலமாக இந்த உண்மைகள் வெளிப்பட்டது. நாடு முழுவதும், மொத்தம் 4,442 முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவர்களில் 2,556 பேர் தற்போது மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்
ஒவ்வொரு உறுப்பினருக்கும் எதிராக பதிவுசெய்யப்பட்ட பல குற்றச்சாட்டுகள் மற்றும் ஒவ்வொரு வழக்கிலும் பல உறுப்பினர்களின் பங்களிப்பு ஆகியவை கிரிமினல் அரசியலின் தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன.
ஆயுள் தண்டனை பெறக்கூடிய அளவு கொடூரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மரியாதைக்குரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உ.பி. தனித்துவமாக உள்ளது. பீகார் மாநிலம், அதன் தற்போதைய 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 43 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இதேபோன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் உள்ளது.
1983 முதல் வழக்குகள் குவிந்து வருகின்ற போதிலும், பெரும்பாலான கிரிமினல் வழக்குகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தின் நடுநிலை ஆலோசகர் தெரிவித்துள்ளார். விசாரணை நீதிமன்றம் வழங்கிய பிணையில் வெளிவர முடியாத உத்தரவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய 413 வழக்குகளில், தற்போதைய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த படுகொலை வழக்கில் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு எதிராக, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது என்பது, கிரிமினல் அரசியலின் மோசமான நிலைக்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது
நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக கருதப்படக்கூடாது என்பது உண்மைதான் என்றாலும், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி நீதிபதி தீபக் மிஸ்ரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெளிவுபடுத்தியிருந்தார்.
"வேட்பாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டாலும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் விவாதித்து அதற்கான தீர்வு காண வேண்டும், அதற்கேற்ப செயல்பட வேண்டும்” என்று ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் பரிந்துரைத்துள்ளது.
அரசியலமைப்பு நெறிமுறையில் நீதித்துறை தலையிட முடியாது என்பதால் தரமான பரிந்துரைகளுக்கு மட்டுமே நீதித்துறை தன்னை உட்டுப்படுத்திக் கொண்டாலும், ஏகபோக கிரிமினல் அரசியல் அரசியலமைப்பு நிர்வாகத்தை குலைக்கிறது.
பதினான்காவது மக்களவையில் குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 24 விழுக்காடாக இருந்தது. இது படிப்படியாக 30 ஆகவும், பின்னர் 34 விழுக்காடாவும், தற்போதைய மக்களவையில் 43 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
கொலை, கடத்தல், கற்பழிப்பு மற்றும் தேசத் துரோகத்திற்கு சமமான பணமோசடி போன்ற மிகப் பெரிய குற்றங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தற்போதைய சட்டத்தை உருவாக்குபவர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் இருப்பது உண்மையில் கவலைக்குரியது. உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தபடி குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க, சட்டம் ஏன் இன்னும் இயற்றப்படவில்லை என்று விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
அரசியல் கட்சிகள் குற்றவாளிகளால் பலப்படுத்தப்படுகின்றன என்று ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் கூறியிருந்தாலும், இன்று குற்றவாளிகள் அரசியல் கட்சிகளை தொடங்கும் அளவிருக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தற்போது 'குற்றவாளிகளால், முதலாளித்துவத்துடன், ஊழலுக்காக' என்று பொருள்கொள்ளும் வகையில் சீரழிந்திருக்கும் ஜனநாயகம் மீண்டுவர வேண்டுமானால், அரசியல் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேர்மை தவறி செல்லும் அரசியல் கட்சிகளை தண்டிப்பதற்கு மக்கள் வலுவான விருப்பத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.