இந்திய கப்பல் படையின் சார்பில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சீ விஜில் 21 என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு ஜன.12ஆம் தேதி தொடங்கியது.
இந்திய கடற்படையின் மேற்பார்வையில் நடந்த இந்த ஒத்திகையில் கடலோரக் காவல் படையினர், அனைத்து காவல் நிலைய அலுவலர்கள், உள்ளூர் காவலர்கள், மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். படகுகளில் கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தனியாா் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு குறித்தும், அடையாளம் தெரியாதவர்கள் வருகை குறித்தும் காவல்துறையினர் கேட்டறிந்தனர். இந்த பயிற்சியில் முழு கடலோர பாதுகாப்பு எந்திரமும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்திய கடற்படை (ஐ.என்), கடலோர காவல்படை (சி.ஜி) ஆகியவற்றின் 110க்கும் மேற்பட்ட கப்பல்களும், விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன. அந்த பயிற்சியின்போது, முழு கடலோரப் பகுதியையும் இந்திய கடற்படையின் விமானங்கள் கண்காணிப்பில் வைத்திருந்தன.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், "இந்திய துறைமுகங்கள் கடல் வர்த்தகத்தின் மிக முக்கிய மையமாக இருக்கிறது. இதன் காரணமாக, துறைமுகங்களின் பாதுகாப்பு வலிமையாக இருக்க வேண்டியது கட்டாயம். அதனை உறுதி செய்திடும் வகையில், பயிற்சி ஒத்திகை நிகழ்வு சீ விஜில் -21 என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இருநாள் பயிற்சியின் போது பொறிமுறைகள் சரிபார்க்கப்பட்டன. அத்துடன், அனைத்து துறைமுகங்களின் நெருக்கடி மேலாண்மை திட்டங்களும் அவசர நிலைகளை சமாளிப்பதற்கான அவற்றின் செயல்திறனுக்காக மதிப்பிடப்பட்டன.
இந்த பயிற்சியில் தேசிய கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் புலனாய்வு (என்சி 3 ஐ) நெட்வொர்க் எனப்படும் தொழில்நுட்ப கண்காணிப்பு உள்கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டது” என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : '20 மாத குழந்தையால் மறுவாழ்வு பெற்ற 5 பேர்' - இந்தியாவின் இளம் வயது நன்கொடையாளர்!