சீனா படைகளுக்கும், இந்திய ராணுவப் படைக்கும் இடையே நடைபெற்ற சண்டையைத் தொடர்ந்து, இந்திய ரோந்துப் படைவீரர்கள், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு காவல் பிரிவைச் சேர்ந்த சிலரை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், கீழ்மட்ட அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் உலாவின.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்திகள், தகவல்கள் வராத நிலையில், இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இந்திய எல்லைக்குள் அமைந்துள்ள பாங்காங் ஏரியில் மோட்டார் படகுகளில் சீனா ராணுவம் வந்ததால், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்றது. இருநாட்டு எல்லைக்கு நடுவில் அமைந்துள்ள பதற்றமான பகுதியில் இருநாட்டு ராணுவமும் முன்னேறிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
சீனாவின் எவ்வித ஆக்கிரமிப்பையும் இந்தியா அனுமதிக்காது என்றும் பாங்காங் ஏரியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து இரு நாட்டுப் படைகளுக்கிடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் ராணுவ உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இந்திய ராணுவத்தின் தலைமை ஜெனரல், மனோஜ் முகுந் நார்வானே 14 படைப்பிரிவுகளுக்கு தலைமையிடமான ’லே’ பகுதியை ஆய்வு செய்தார். மேலும், அங்கு நிலவக்கூடிய கள சூழ்நிலை குறித்து ராணுவ அலுவலர்களிடமும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: வடகிழக்கு மாநிலங்களில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை!