1999ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கார்கில் போருக்குப் பின் ராணுவப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய மூன்று படைகளுக்கிடையே நிலவும் ஒருங்கிணைப்பில்லாமை குறித்தும் பாதுகாப்பு முறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் ஆராய்வதற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
முப்படைகளுக்கும் வெவ்வேறு தளபதிகள் இருப்பதுதான் அந்த ஒருங்கிணைப்பு இல்லாமைக்குக் காரணம் என்று அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்தே முப்படைகளுக்கும் தலைமை தளபதி என்ற பதவியை உருவாக்க வேண்டும் என்ற பேச்சு அடிப்பட்டுவந்தது.
அந்தப் பேச்சுக்கு அடித்தளமிடும் விதமாக இந்தாண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்பபடும் என்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க பிரதமர் தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
![முப்படை தலைமை தளபதியின் பொறுப்புகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5487779_staff.jpg)
கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரத் துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக முப்படை தலைமை தளபதி செயல்படுவார். மற்ற மூன்று தளபதிகள் வாங்கும் அதே சம்பளத்தைத்தான் தலைமை தளபதியும் வாங்குவார். தலைமை தளபதி மற்ற மூன்று தளபதிகளின் முடிவுகளில் குறுக்கிட மாட்டார். பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் முதன்மை ஆலோசகராக தலைமை தளபதி செயல்படுவார். மேலும் அவர் நான்கு நட்சத்திர தகுதியுடையவராகவும் இருப்பார்” என்று கூறியிருந்தார்.
அமைச்சர் கூறியதைத் தவிர்த்து பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலே தலைமையில் உருவாக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில், தலைமை தளபதியின் நியமனம், அவரின் பொறுப்பு உள்ளிட்டவைகளும் குறிப்பிட்டப்பட்டுள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில், மூன்று தளபதிகளின் முதன்மைத் தளபதியாக முப்படை தலைமை தளபதி இருப்பார், முப்படைகளையும் ஒன்றுசேர்ப்பதே தலைமை தளபதியின் தலையாய பொறுப்பு, மூன்று தளபதிகளுக்கும் அரசுக்குமிடையே இடையீட்டாளராகச் செயல்படுவார், பாதுகாப்பு திட்டமிடல் குழு உறுப்பினராகச் செயல்படுவார் உள்ளிட்டவை தலைமை தளபதியின் பொறுப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும், அவர் தலைமையிலான ராணுவ விவகாரத் துறை முப்படைகளின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையிலிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவையனைத்தும் உள்ளடக்கிய அறிக்கைக்குத்தான் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரையில் பாதுகாப்பு தொடர்பான கோப்புகள் பாதுகாப்புச் செயலரிடம் சென்றுகொண்டிருந்த நிலையில், தலைமை தளபதி பதவியிலிருப்பவரிடம் செல்லும்.
![ராஜ்நாத் சிங்குடன் விபின் ராவத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5487961_raj.jpg)
இந்த பதவிக்கான நபரை பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் விபின் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவடைய இருப்பதால், அவரே முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நிமிடத்திற்கு நிமிடம் அதிரடி சட்டங்களையும் திட்டங்களையும் அமல்படுத்தும் மத்திய அரசு யாரும் எதிர்பாராத முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளது. எது எப்படியாகினும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதி பதவியை அலங்கரிக்கப் போகும் அந்த நபர் யாரென்று இன்னும் சில தினங்களில் தெரிய வரும்!
இதையும் படிங்க: தேசிய மக்கள் தொகை பதிவேட்டால் யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்பட மாட்டாது - அமித் ஷா உறுதி!