தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த, மூன்று நாள் சர்வதேச அறிவியல், தொழில்நுட்ப மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் திறந்து வைத்து, தலைமை தாங்கினார்.
இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத் திறமை ஆகியவற்றின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், நாட்டின் ஒவ்வொரு ஏழை நபரையும் சென்றடைய வேண்டும் என்பதே அவற்றின் நோக்கம் என்றார். தொடர்ந்து, தேசியப் பேரிடர் மேலாண்மைக்கான புகழ்பெற்ற 10 குறிப்புகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துதல், பேரழிவு தொடர்பான பிரச்னைகளில் பணியாற்ற பல்கலைக்கழகங்களின் அமைப்பை உருவாக்குதல் உள்ளிட்டவற்றையும் அவர் வலியுறுத்தினார். பொருளாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை (டிஆர்எம்) அடிப்படையில் எதிர்கால உலகளாவிய அரசியல் கட்டமைப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் ராய் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவன உறுப்பினர் கமல் கிஷோர், பயனுள்ள விளைவுகளுக்காக, ஆராய்ச்சிக் களங்களின் பல்வேறு பரிமாணங்களை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுடன் 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், அரசு அலுவலர்கள், அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள், திட்ட வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.