மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் பிடித்திருக்கிறது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை தவிடுபொடியாக்கி ஆட்சியை தக்கவைக்க பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது.
மத்தியில் ஆளும்கட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான தகவலை அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமரின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி பேசுகையில், “ விண்வெளி சாதனை நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா இன்று இடம் பிடித்துள்ளது. விண்வெளியில் செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கை கோளை தாக்கி அழிக்கும் சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தாழ் நீள்வட்ட பாதையில் சென்ற செயற்கை கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது.
மிஷன் சக்தி என்ற பெயரிலான தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியது. அது மூன்றே நிமிடங்களில் வெற்றி பெற்றது” என்றார்.