இது குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும். அறிகுறிகள் இல்லாதோர் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும்.
பயணிக்க தகுதியானவர்கள் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகுதியானவர் பட்டியல் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அமைந்திருக்கும். இதைப் படித்து தகுதியானவர்கள் மட்டும் விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்யலாம்.
மேலும், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி உபயோகித்து கைகளைச் சுத்தம்செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊழியர்களும், பயணிகளும் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். வந்தே பாரத் திட்டத்தில் இந்தியாவிற்கு வருவோர் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவுசெய்திருக்க வேண்டும்.
விமான கட்டணம் அந்தந்தப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும். கரோனா தொற்று அறிகுறி இல்லாதோர் மட்டுமே விமானத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். முன்கூட்டியே வந்தே பாரத் திட்டத்தில் வரும் பயணிகளின் தரவுகளை அந்தந்த மாநிலங்களுக்குப் பகிர்ந்துவிட வேண்டும்.
இந்தியாவிற்கு வரும் விமானங்கள், கப்பல்களின் தரவுகள் இரண்டு நாள்களுக்கு முன்பே ஆன்லைனில் பதிவிட வேண்டும். இதில் பயணிக்கும் அனைவரிடமும் சொந்த ரிஸ்கில்தான் பயணிக்கிறோம் என்று உறுதியளிப்பைப் பெற வேண்டும்.
இந்தியாவிற்கு வரும் அனைவரும் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாட்டில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 11 லட்சத்து 23 ஆயிரம் பேர் வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர்.