நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்து 375 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இது மிகக் குறைவான பாதிப்பாகும். அத்துடன் 201 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் - 19 நிலவரம்
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 844 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 36 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 850 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தற்போதைய கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 15ஆவது நாளாக மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
பரிசோதனை நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 05) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 236 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதுவரை சுமார் 17 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 997 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி தயாரிப்பில் மும்முரம் காட்டும் பாரத் பயோடெக்; நான்கு உற்பத்தி கூடங்களுக்கு கிரீன் சிக்னல்!