நேதாஜி இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். எனவே, அவரைப் பற்றிய ரகசியங்களைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து பெற்றுத்தர உதவிட வேண்டும். நீதிபதி முகர்ஜி ஆணையம் அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, நேதாஜி மரணம் தொடர்பான மர்மத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்திவந்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவிலிருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காகப் போராடினார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுகொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ஆம் ஆண்டு ஷா நவாஸ் குழுவும், 1999ஆம் ஆண்டு முகர்ஜி ஆணையமும் அமைக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி ஆணையம் அறிக்கையில், 1945ஆம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த 68 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்ம முடிச்சு, இதுவரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தொடர்பான முக்கிய கோப்புகளைத் தேட ஜப்பானிய அரசாங்கத்தை இந்தியா அணுகுமாறு அவரது பேரன் சி கே போஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.