டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் ராஜ்குமாரி அமிர்த கவுர் கட்டடம் திறப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உலகளாவிய அச்சுறுத்தலான கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றியை நோக்கி பயணிக்கிறது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 2 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் வரும் காலங்களில், ஒரு நாளைக்கு 10 லட்சம் கரோனா கண்டறிதல் சோதனைகள் நடத்தப்படும். சோதனை கண்டறியும் திறனும், தொழில்நுட்பமும் மேலும் அதிகரிக்கப்படும்.
2020 ஜனவரி மாதத்திலிருந்து இந்திய ஆய்வகத்தின் எண்ணிக்கை 1234 ஆக உயர்த்துள்ளது. நமது ஆய்வக வலையமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆசிய பசிபிக் பகுதிகளில் இயங்கிவரும் மிகப் பெரிய அளவிலான ஆய்வக நிறுவல்களில் ஒன்றான ராஜ்குமாரி அமிர்த் கவுர் ஓபிடி கட்டடம் விளங்குகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் சோதனைகள் வரை விரிவாக்கம் செய்யும் திறன் கொண்டது. அதேபோல ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கையாளும் திறனையும் கொண்டிருக்கிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 63.25 விழுக்காடு பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அதேபோல, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 45 விழுக்காட்டிலிருந்த சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 34.18 விழுக்காடாக சரிவு கண்டுள்ளது.
நாம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. 1.3 பில்லியன் மக்கள் தொகை இருந்தபோதிலும், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா கரோனாவை ஒப்பீட்டளவில் சிறப்பாக நிர்வகித்து வருகிறது. ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு பாதிப்பு வழக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அது இன்னும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 15 இறப்புகள் மட்டுமே நமது நாட்டில் பதிவாகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின் மூலமாகவே இதை நாம் உணர முடியும். மற்ற நாடுகளில் பாதிப்பு நிலவரம் இந்தியாவில் இருப்பதை விட குறைந்தது 16-17 மடங்கு அதிகம். இந்திய அரசின் தொடர்ச்சியான மக்கள் நலன்புரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தொடர் சரிவுக்கு பங்களித்திருக்கிறது. வீடு வீடாக கணக்கெடுப்பு, சுற்றளவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சரியான நேரத்தில் உதவிகளை வழங்குவது, கட்டுப்பாட்டு மண்டலங்களின் கண்காணிப்பு, நோயறிதல் மற்றும் பராமரிப்பு நெறிமுறை, மருத்துவ மேலாண்மை காரணமாக நாம் வெகுவாக பலனடைந்துள்ளோம்.
மொத்தமுள்ள 36 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 826 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையை ஒரு கோடியே 27 லட்சத்து 39 ஆயிரத்து 490 பேரிடம் கண்டறிதல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 10 லட்சத்து 5 ஆயிரத்து 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 36 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 6 லட்சத்து 36 ஆயிரத்து 609 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்" என தெரிவித்தார்.