இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனாவைக் கட்டுபடுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 529ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 ஆக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில், நேற்று ஒரே நாளில் மட்டும் 77 ஆயிரத்து 266 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளில் இதுவரை பதிவான ஒரு நாள் தொற்று எண்ணிக்கையின் உச்சம் ஆகும். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழு லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழ்நாடு மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுவரை இந்தியாவில் மூன்று கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், நேற்று மட்டும் ஒன்பது லட்சத்து ஆயிரத்து 338 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.